சென்னை, தி.நகர் ஆகாய நடை மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்த ஆகாய நடை மேம்பாலத்தால் தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.;
சென்னை,
சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
தியாகராய நகர் வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் இந்த ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வந்தது. பின்னர், கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் தாமதம் ஆகியது. பின்னர், மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது
570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க முடியும். இந்த ஆகாய நடை மேம்பாலத்தால் தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.