சென்னையில் நடந்த முதல்- அமைச்சர் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டியில் ஈரோடு கல்லூரி மாணவிகளுக்கு பதக்கம்
சென்னையில் நடந்த முதல்- அமைச்சர் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டியில் ஈரோடு கல்லூரி மாணவிகளுக்கு பதக்கம்;
முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் சென்னையில் நடந்து வருகிறது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பளு தூக்கும் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. ஈரோடு மாவட்டம் சார்பில் ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு மாணவி எஸ்.ஜீவிதா மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றார். இதுபோல் பி.காம். (கணினி) மாணவி ஆர்.திவ்யா 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றார்.
கல்லூரிக்கும் ஈரோடு மாவட்டத்துக்கும் பெருமை சேர்ந்த இந்த வீராங்கனைகளுக்கு கல்லூரி தாளாளர் கே.கே.பாலுசாமி, முதல்வர் ரா.சங்கரசுப்பிரமணியன், இயக்குனர் ஆர்.வெங்கடாச்சலம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மு.வெங்கடாச்சலம், பேராசிரியர்கள் ஏ.விஜயகுமுார், என்.ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எ.தனலட்சுமி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.