எம்.புதுப்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு

எம்.புதுப்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.;

Update:2023-10-02 03:38 IST

சிவகாசி, 


பட்டாசு தயாரிப்பு

சிவகாசி பகுதியில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்து அனுப்புவது அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் சிவகாசி தாசில்தார் வடிவேல் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு செய்து சட்ட விரோத பட்டாசு தயாரிப்பை கட்டுப்படுத்தி வருகிறார்கள். மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ஹரிச்சந்திரன் சம்பவத்தன்று அந்த கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்த ரவிசெல்வம், மாரிக்காளை ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் தகரசெட் அமைத்து பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளனர்.

தடுப்பு நடவடிக்கை

இதை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி ஹரிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எம்.புதுப்பட்டி பகுதியில் சில இடங்களில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் போலீசார் இதுகுறித்து எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சட்டவிரோத பட்டாசுகளை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் வருவாய்த்துறையினர் கொடுக்கும் தகவல் அடிப்படையிலேயே தற்போது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் எம்.புதுப்பட்டி பகுதியில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து சட்டவிரோத பட்டாசு தயாரிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்