அரசின் மெத்தனத்தால் பட்டாசு வெடி விபத்து- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

அரசின் மெத்தனத்தால், பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2023-10-18 23:24 GMT



தொடர் விபத்துகள்

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பட்டாசு தயாரிக்கும் இடங்களில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு பலரும் உயிரிழக்கும் சம்பவங்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சிவகாசி அருகே பட்டாசு கடை மற்றும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பெண்கள் உள்பட 14 பேர் இறந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர், பட்டாசு விபத்து ஏற்பட கூடாது. உயிர் பலி இருக்க கூடாது என்பதற்காக பல ஆலோசனைகளை கூறினார். ஆனால் தமிழக அரசு இதை பொருட்படுத்த வில்லை. மெத்தனமாக இருக்கிறது.

நலவாரியம்

தமிழக அரசு கவனத்தோடு செயல்பட்டு உரிய வழிகாட்டுதல்களை மேற்கொண்டு இருந்தால் பட்டாசு ஆலை விபத்து நடந்து இருக்காது. தமிழகத்தில் 1,482 பட்டாசு ஆலைகள் உள்ளன. அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,085 பட்டாசு ஆலைகள் உள்ளது. சில்லறை விற்பனை கடைகள் 6,539 உள்ளன. இந்த பட்டாசு தொழில் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்த தொழிலாளர்களுடைய நலனை காப்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உரிய பாதுகாப்புகளை வழங்க நல வாரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதனை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்