ராமநத்தம், வேப்பூர் பகுதியில் மளிகை கடை, வீடுகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் முதியவர் கைது

ராமநத்தம், வேப்பூர் பகுதியில் மளிகை கடை மற்றும் வீடுகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-10-11 19:13 GMT

ராமநத்தம், 

மளிகை கடை

ராமநத்தம் அடுத்த மேல்ஆதனூர் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் பட்டாசுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராமநத்தம் போலீசார் மேல்ஆதனூர் பகுதியில் உள்ள கடைகளில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 58) என்பவர் தனது மளிகை கடையில் அனுமதி இன்றி பட்டாசுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர். மேலும் அவரது கடையில் இருந்த ரூ.7,500 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

ரூ.50 ஆயிரம்

இதேபோல் மாவட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையிலான போலீசார் வேப்பூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது, அங்குள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த வீரமுத்து(50) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், வீரமுத்து மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் மருதூர் அம்பாள் புரத்தில் உள்ள வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை மருதூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சண்முகம் மகன் கொளஞ்சிகண்ணன்(35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்