வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
போடியில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டுக்குள் பதுக்கல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை கடைகளுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளை தீவிரமாக கண்காணிக்கும்படி, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போடி உருமிக்காரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போடி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ரூ.10 லட்சம் பட்டாசுகள்
அப்போது வீட்டின் ஒரு அறையில் ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டிகளை பிரித்து பார்த்தபோது, அதில் பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பட்டாசுகளை போடி காமராஜர் பஜாரில் கடை வைத்திருக்கும் பாலு என்பவர் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.10 லட்சம் என்றும், அதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.