சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; அறைகள் இடிந்து சேதம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் சேதம் அடைந்தன. வெடி விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிலாளர்கள் இல்லாததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட நாரணாபுரம் கிராமத்தில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை வழக்கம்போல் பணிகள் முடிந்த நிலையில் ஊழியர்கள் வெளியே சென்று விட்டனர்.
இந்தநிலையில் இரவு 12.45 மணிக்கு அங்கு பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் வைத்திருந்த அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமானது. மேலும் இந்த அறை அருகில் இருந்த மற்றொரு அறையும் சேதம் அடைந்தது. விபத்து நடந்த போது அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
வழக்குப்பதிவு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை மீதம் வைத்து விட்டு சென்ற நிலையில் அது வேதியியல் மாற்றம் அடைந்து வெடி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் ஆலையின் உரிமையாளர் ராஜாராம், போர்மென் கருப்பசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நள்ளிரவு ஏற்பட்ட இந்த வெடிவிபத்தால் அந்த பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரம் வெடிசத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.