எரியோட்டில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள், மொபட்டுகள்

எரியோட்டில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள், மொபட்டுகள் தீப்பிடித்து எரிந்தன.

Update: 2022-10-14 16:07 GMT

எரியோட்டில், கரூர் சாலை பகுதியில் வசித்து வருபவர் வேன் டிரைவர் ராஜா. இவர் நேற்று இரவு நடராஜ் என்பவரது உரக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். இதேபோல் தென்னம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சவுந்தரராஜன், வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளை எரியோட்டில் உள்ள துரைசாமி நாடார் தெருவில் சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றார். மேலும் எரியோடு நடுத்தெருவை சேர்ந்த வியாபாரி சின்ராஜ் என்பவர் தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தியிருந்தார். இதேபோல் பாண்டியன்நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் என்பவர் தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடராஜ், சவுந்தரராஜன் ஆகியோரின் மோட்டார் சைக்கிளும், சின்ராஜ், மணிகண்டன் ஆகியோரின் மொபட்டுகளும் அடுத்தடுத்து திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் 2 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. 2 மொபட்டுகள் பாதி அளவுக்கு எரிந்து சேதமானது.

இதேபோல் கடந்த 3-ந்தேதியும் எரியோட்டில் மோட்டார் சைக்கிள், மொபட்டும் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் எரியோடு பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர். மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் தீவைத்து எரிக்கிறார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எரியோடு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்