கூடலூர் அருகே கோவில் வளாகத்தில் இருந்த மூங்கில் மரங்களில் தீ
கூடலூர் அருகே கோவில் வளாகத்தில் இருந்த மூங்கில் மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.;
கூடலூர் அருகே கம்பம் சாலையில் பிரசித்திபெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் சிலர் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த கோவில் வளாகத்தில் மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன.
இந்தநிலையில் இன்று கோவில் வளாகம் அருகே உள்ள மூங்கில் மரங்களில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது மரங்கள் தீ பற்றி எரியத்தொடங்கின. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கம்பம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் மூங்கில் மரங்களில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவிலில் பக்தர் யாரோ ஒருவர் கற்பூரம் ஏற்றியபோேதா அல்லது விளக்கு ஏற்றியபோதோ காற்றில் பறந்து தீ மூங்கில் மரங்கள் மீது பற்றி இருக்கலாம் என்றனர்.