ஆனைமலை
ஆனைமலை அருகே சிங்காநல்லூர்-குஞ்சுபாளையம் சாலையில் பழைய வாகனங்களை உடைக்கும் குடோன் உள்ளது. இங்கு வாகனங்களில் இருந்து எடுக்கும் சீட் கவர், டயர், ஆயில் உள்ளிட்டவற்றை ஓரிடத்தில் குவித்து வைத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் அந்த குவியலில் எதிர்பாராதவிதமாக தீ பற்றியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.