குன்றத்தூரில் பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து

குன்றத்தூரில் பஞ்சு மெத்தை தயாரிக்கும் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் உயிர் தப்பினர்.

Update: 2023-09-04 18:46 GMT

குன்றத்தூர்,

குன்றத்தூரை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (வயது 36). இவர் குன்றத்தூர் மேத்தா நகர் 10-வது தெருவில் மெத்தைகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியை குடோனாக பயன்படுத்தி வந்தார். அங்கு மெத்தைகள் தயாரிக்க பயன்படும் பஞ்சுகளை வைத்திருந்தார். நேற்று ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குடோனில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பஞ்சுகள் என்பதால் குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.

மின் கசிவு

இது குறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பஞ்சு குடோனில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். எனினும் குடோன் முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கிருந்த பஞ்சுகள் மற்றும் எந்திரங்கள், தயார் செய்து விற்பனைக்கு வைத்து இருந்த மெத்தைகள் அனைத்தும் தீக்கிரையாகின.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குடோனில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த பஞ்சு மெத்தை குடோனில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குடியிருப்பு வாசிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்