கலெக்டர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

Update: 2023-07-17 20:00 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி தீத்தடுப்பு ஒத்திகையை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேரிடர் காலங்களில் நவீன சாதனங்கள் மூலம் மீட்பு பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனே வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பாதுகாப்பான இடத்துக்கு...

அணைகள், ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அவற்றின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களின் வீடுகளில் இருக்கும் பிளாஸ்டிக் குடம், காய்ந்த மரங்கள், தண்ணீர் கேன் ஆகியவற்றை பயன்படுத்தி எளிதாக பயணித்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல முடியும்.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பருவ மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு ஒத்திகை

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் தீயணைப்பு படை மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் மேற்பார்வையில், உதவி மாவட்ட அலுவலர்கள் மயில்ராஜூ, சிவக்குமார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பேரிடர் காலங்கள், மழைக்காலங்களில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அதாவது, உயரமான கட்டிடத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும், பெட்ரோல், எண்ணெய் உள்ளிட்டவற்றால் தீ விபத்து ஏற்பட்டு அதில் சிக்கியவர்களை எப்படி மீட்பது மற்றும் தீயை அணைப்பது, சமையல் கியாஸ் சிலிண்டரில் பற்றிய தீயை எவ்வாறு பாதுகாப்பாக அணைப்பது, வாகனங்களில் தீப்பற்றினால் அதில் சிக்கியவர்களை பாதுகாப்பாக எப்படி மீட்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தி காண்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்