சித்தோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து
சித்தோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பவானி
சித்தோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பஞ்சு மில்
ஈரோடு அருகே உள்ள சித்தோடு குமலன் குட்டை வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி ராஜா (வயது 50). இவர் ராயபாளையம் அடுத்துள்ள வாய்க்கால் மேடு என்ற இடத்தில் வேஸ்டு பனியன் துணிகளை திருப்பூரில் இருந்து வாங்கி வந்து அதை பஞ்சாக அரைக்கும் மில் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த மில்லில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் மில்லுக்கு அருகே உள்ள முட்புதருக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளார்கள். அந்த தீ பஞ்சு மில் வரை பரவியது. சில நொடிகளில் மில்லுக்குள் அரைத்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்த பஞ்சு மூட்டைகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
விசாரணை
மேலும் பஞ்சு அரைக்கும் எந்திரங்களிலும் தீ பற்றி எரிந்தது. உள்ளே வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார்கள். உடனே பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார்கள்.
எனினும் இந்த தீ விபத்தில் எந்திரத்தில் அரைக்க வைத்திருந்த வேஸ்டு பனியன் துணிகள், 50-க்கும் மேற்பட்ட பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாயின. சேதமதிப்பு எவ்வளவு என்று உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முட்புதருக்கு யார் தீ வைத்தது? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.