மேற்கு தொடர்ச்சி மலையில் 2-வது நாளாக காட்டுத்தீ

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-06 18:45 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

காட்டு தீ

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாணிப்பாறைக்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட பீட் நம்பர் 4 வல்லாளம்பாறை பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

தீயால் பலவகை அரிய மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக போராட்டம்

ஆனால் அப்பகுதியில் அதிகமாக காற்று வீசியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே 2-வது நாளாக நேற்றும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

மேலும் மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மலையில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் தீவிர சோதனையும் நடத்தினர்.

பக்தர்கள் செல்ல தடை

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் வனப்பகுதியில் பற்றிய காட்டு தீயை அணைத்தால் மட்டுமே நாளை மறுநாள்(9-ந் தேதி) நடைபெற உள்ள பவுர்ணமி பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், தீ அணையாத பட்சத்தில் பவுர்ணமிக்கும் தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் தடை செய்யப்பட்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்ெகாண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்