ரூ.4 கோடி வரை வசூல் செய்து நிதிநிறுவனம் மோசடி
ரூ.4 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக நிதிநிறுவனம் மீது ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் வர்த்தக சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.
முதுகுளத்தூர் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைதீர் முகாமில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சேலத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக முதுகுளத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனம் சார்பில் தினசரி வசூல், வார வசூல் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்து வைப்பு நிதி பெற்று வட்டியுடன் திரும்ப செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் வசூல் செய்த பணத்தை முதிர்வு காலம் முடிந்தும் திரும்ப தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் முதுகுளத்தூர் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் 150 பேரும், பொதுமக்கள் சுமார் 150 பேர் என ஏராளமானோர் ரூ.4 கோடி வரை முதலீடு செய்திருந்த நிலையில் அவர்களுக்கான முதிர்வு காலம் முடிந்தும் தொகையை திருப்பி வழங்கவில்லையாம். இந்நிலையில் அந்த நிதிநிறுவனத்தினை மூடிவிட்டு நிர்வாகிகள் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.