ரோந்து பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்

திருச்சியில் ரோந்து பணியின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.

Update: 2023-08-27 10:57 GMT

திருச்சி,

திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (வயது 45) கடந்த 30-7-2023 அன்று அரிஸ்டோ ரெயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் "கள ஆய்வில் முதல்-அமைச்சர்" திட்டத்தின் கீழ், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில், இன்று திருச்சி விமான நிலையத்தில், ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வின்போது, திருச்சி மாவட்ட கலெக்டர் எம். பிரதீப்குமார், மாநகர காவல் துறை ஆணையர் என். காமினி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்