புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 538 மாணவிகளுக்கு நிதி உதவி

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 538 மாணவிகளுக்கு நிதி உதவி

Update: 2022-09-05 20:09 GMT

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 538 மாணவிகளுக்கு நிதி உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

உயர்கல்வி

தமிழக அரசு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றி செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, புதுமைப்பெண் திட்டம் என்ற நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பதிவு செய்து விண்ணப்பிக்கும் தகுதியான மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் மூர்த்தி மதுரையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி, மதுரை மீனாட்சி கல்லூரியில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங், மேயர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வங்கி புத்தகம்

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 538 உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000-ம், உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி கணக்குப் புத்தகம், ஏ.டி.எம். அட்டை அடங்கிய தொகுப்புகளை அமைச்சர் மூர்த்தி மாணவிகளிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம், மீனாட்சி கல்லூரி முதல்வர் வானதி, மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் சர்மா, மாவட்ட சமூக நல அலுவலர் நளினா ராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அணில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்