வேளாண்மை பட்டதாரிகள் தொழில் தொடங்க நிதி உதவி- அதிகாரி தகவல்

கள்ளிக்குடி தாலுகாவில் வேளாண்மை பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-10-20 01:10 GMT

திருமங்கலம்,


மானியம்

வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரகலா தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர்நலத்துறை 23-24 நிதிநிலை அறிக்கையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்குதல் என்ற திட்டத்தின் கீழ் பயனாளிக்கு 50 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை வழங்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வேளாண்மை பட்டதாரிகள் தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற தகுதிகள், கல்வித்தகுதி வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பிரிவில் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 40-க்குள் இருத்தல் வேண்டும். கம்ப்யூட்டர் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்ககூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வங்கிகடன் உதவியுடன் மேற்கொள்ளப்படும். தொழில்களுக்கு மட்டுமே அனுமதிதரப்படும்.

கடனுதவி

இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் மானியத்தொகை போக மீதமுள்ள தொகைக்கு வங்கிக்கடன் பெற்றமைக்கான சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதியுதவி பெற்று வங்கி கடனுடன் வேளாண்மை சார்ந்த தொழிலை தொடங்க வேளாண்மை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கள்ளிக்குடி தாலுகாவை சார்ந்த தகுதியுள்ள பயனாளிகள் கூடுதல் விவரங்களுக்கு கள்ளிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்