சண்டையிட்ட காட்டு யானைகள்
மசினகுடி அருகே மாயாறில் தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள் சண்டையிட்டன. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கூடலூர்
மசினகுடி அருகே மாயாறில் தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள் சண்டையிட்டன. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காட்டு யானைகள்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மற்றும் வெளிமண்டல வனப்பகுதிகள் உள்ளது. வெளிமண்டலமான மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து வருகிறது.
தற்போது மாலை நேரத்தில் கோடை மழை பரவலாக பெய்வதால், கோடை வறட்சியின் தாக்கம் படிப்படியாக குறைந்து வனப்பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக உணவு, தண்ணீர் தேடி பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்ற காட்டு யானைகள் மீண்டும் முதுமலைக்கு திரும்புகின்றன. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
சமூக வலைத்தளத்தில் வைரல்
இந்தநிலையில் மசினகுடி அருகே மாயாற்றில் தண்ணீர் அருந்த 2 காட்டு யானைகள் வந்தன. ஆற்றில் தண்ணீர் அருந்திய பின்னர், 2 யானைகளும் திடீரென சண்டையிட்டன. சிறிது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்றன. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நீலகிரியில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் முதுமலை, மசினகுடி வனப்பகுதிகளில் நடமாடும் வன விலங்குகளை கண்டு ரசித்தவாறு வாகனங்களில் செல்கின்றனர். நேற்று முன்தினம் மசினகுடி-மாயாறு சாலையில் காட்டு யானைகள் நடமாடின.
இதை பார்த்த சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவுக்கு முன்னால் நிறுத்தினர். தொடர்ந்து வாகனங்களுக்குள் இருந்தவாறு காட்டு யானைகளை கண்டு களித்தனர். அப்போது காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றன. மேலும் புற்களை மேய்ந்தவாறு காட்டு யானைகள் சாலையோரத்தில் நீண்ட நேரம் நின்றிருந்தது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.