மருத்துவ இடங்களை விற்க `நீட்' தேர்வுக்கு எதிராக போராடுகின்றனர் - அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழக முதல்-அமைச்சரோ, தேர்தல் வாக்குறுதிகளை 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக பகல் கனவு கண்டுகொண்டுள்ளார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
துறையூர்,
தமிழகத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் திருச்சி மாவட்டம், துறையூரில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் அரசு வேலை பார்க்கும் அதிகாரிகள், கையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேலை பார்க்கக்கூடிய அவல நிலை உள்ளது. இப்படி இருந்தால் எப்படி தமிழகம் முன்னேறும். இங்கிருக்கும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மணல் கொள்ளையில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். தன் குடும்பம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தி.மு.க. ஆட்சி செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் துணைவேந்தராக தமிழக முதல்-அமைச்சர் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் படித்த பேராசிரியராக இருப்பவர் மட்டுமே அந்த பதவிக்கு தகுதியானவர்கள். இது புரியாமல் கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் போராட்டம் நடத்துவதற்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. மதுவுக்கு எதிராக போராடலாம். மணல் கொள்ளைக்கு எதிராக போராடலாம். இதை தவிர்த்து தங்களது மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை விற்பனை செய்வதற்காக 'நீட்' தேர்வுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
நடைபயணம் வரும் வழியில் என்னை இரண்டு மருத்துவ கல்லூரி மாணவிகள் சந்தித்து நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மேலும், 'நீட்' தேர்வால் தான் மருத்துவ கல்லூரியில் எங்களால் படிக்க முடிந்தது என்று அவர்கள் கூறியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தமிழக முதல்-அமைச்சரோ, தேர்தல் வாக்குறுதிகளை 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக பகல் கனவு கண்டுகொண்டுள்ளார்.
எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து, மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக ஆக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் துறையூர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.