பட்டாசு கடையில் பயங்கர தீ; வெடிகள் நாசம்
சிவகாசி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து நாசமாகின.;
சிவகாசி,
சிவகாசி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து நாசமாகின.
பட்டாசு கடைகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் பாறைப்பட்டி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன..
இந்த ஆண்டு தீபாவளிக்காக அங்குள்ள சில கடைகளில் அதிக அளவில் பட்டாசுகள் முன்னதாகவே இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சில நாட்களாக வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டாசு கடைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் பல பட்டாசு கடைகள் மூடப்பட்டு இருந்தன.
வெடித்து சிதறின
பாறைப்பட்டியில் வைரவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் நேற்று மாலை திடீரென வெடி சத்தம் கேட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்து பார்த்த போது அந்த கடையில் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறிய வண்ணம் இருந்தன. இதனால் பதற்றம் அடைந்த அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கும், சிவகாசி கிழக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் சம்பவ இடத்தை நெருங்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து நாசமானதாக கூறப்படுகிறது. சம்பவம் பற்றி சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.