தமிழகம் முழுவதும் நடந்தது 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடந்தது.;

Update:2022-09-22 05:21 IST

பூந்தமல்லி,

தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 1,000 இடங்களில் நேற்று காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு மருந்து, மாத்திரைகளை வாங்கி சென்றனர். சென்னையை பொறுத்தவரை 100 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது.

அமைச்சர்தொடங்கிவைத்தார்

இதன்படி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கோளப்பன்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.

இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1½ சதவீதம் உயர்வு

பருவகால மாற்றம் என்பதால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி சென்னையில் 100 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.

பருவநிலை மாற்றங்கள் வரும்போது காய்ச்சல் 1½ சதவீதம் உயர்வது வழக்கம். அதுபோலதான் தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு, புளூ காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (வியாழக்கிழமை) முதல் எந்த பகுதியில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருக்குமானால் காய்ச்சல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

353 பேர் எச்1 என்1 வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் 3 நாட்களில் சரியாகிவிடும்.

நர்சு, டாக்டர் மீது நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி புஷ்பா என்பவரின் குழந்தை இறந்து பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியான அவரிடம் குழந்தை தலைகீழாக இருப்பதாகவும், ஸ்கேன் எடுக்குமாறும் டாக்டர்கள் வலியுறுத்தினார்கள். அவர் ஸ்கேன் எடுத்துவிட்டு தனது உறவினர் இறந்து விட்டதால் அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுவிட்டு 2 நாட்கள் கழித்து பிரசவத்திற்காக வந்தார்.

இதில் குழந்தை இறந்து விட்டது. தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. பணியின்போது டாக்டர் இல்லாததால் காணொலி காட்சி மூலம் பிரசவம் பார்த்த நர்சு மற்றும் பணியில் இல்லாத டாக்டர் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்