திருமுருகநாத சாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சாமி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-10-31 18:38 GMT


திருமுருகன்பூண்டி திருமுருகநாத சாமி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண உற்சவம்

கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பூர் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் நேற்று முன் தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று கோவில் வளாகத்தில் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக அமைக்கப்பட்டிருந்த திடலில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகநாதர் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியத்துடன் சண்முகநாதர் வள்ளி, தெய்வானைக்கு திருமாங்கல்யம் கட்டினார். அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, சக்திவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் அட்சதை தூவினார்கள். பின்னர் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் குடும்பமாக கலந்து கொண்டு, பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் வளாகத்தில் 2 இடங்களில் பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் ஸ்கிரீன் அமைத்து, நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்