வெள்ளி சப்பரத்தில் விநாயகர் திருவீதி உலா

வெள்ளி சப்பரத்தில் விநாயகர் திருவீதி உலா நடந்தது.;

Update:2022-05-27 23:39 IST

சிங்கம்புணரி, 

சேவுகப்பெருமாள் கோவில் திருவிழாவையொட்டி வெள்ளி சப்பரத்தில் விநாயகர் திருவீதி உலா நடந்தது.

சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்

சிங்கம்புணரி நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. வைகாசி திருவிழாவையொட்டி மாடுகள் பூட்டிய வெள்ளிச் சப்பரத்தில் வெண்கல விநாயகர் சிலை சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் இருந்து சந்திவீரன் கூடத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கோவிலில் இருந்து புது மாடுகள் பூட்டிய சப்பரத்தில் வெள்ளி கேடயத்தில் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பூஜிக்கப்பட்ட விநாயகப்பெருமான் வெண்கல சிலை மலர்மாலை சூடி கீழக்காடு சாலை வழியாக சந்திவீரன் கூடத்திற்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் சென்றடைந்தது.

கிராம மக்கள் வழிபாடு

முன்னதாக வைகாசி திருவிழா தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கும் விதமாகவும் கீழக்காட்டு சாலை வழியாக உள்ள ஒவ்வொரு கல்லு புள்ளியிடம் திருவிழா நடத்த பணம் வசூல் செய்ய வருவதாக வரலாறு கூறுகின்றது. விநாயகப்பெருமான் சந்திவீரன் கூடத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியில் கீழ காட்டு சாலை வழிநெடுகிலும் கிராம பொதுமக்கள் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

சந்திவீரன் கூடத்தில் விநாயகப்பெருமான் சிலை வைத்து 10 நாட்கள் பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு வெள்ளி கேடயத்தில் மாடுகள் பூட்டிய சப்பரத்தில் சந்திவீரன் கூடத்தில் இருந்து வருகின்ற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை புறப்பட்டு சேவுகப்பெருமாள் கோவில் சென்றடையும். அதன்பிறகு அன்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டுதல் விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் சிங்கம்புணரி நாட்டார்கள் கிராமங்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்