தூக்குப்போட்டு பெண் தற்கொலை

பள்ளிபாளையம் அருகே கணவரிடம் டி.வி. ஸ்டாண்ட் வாங்கி கொடுக்காததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-09-12 18:45 GMT

பள்ளிபாளையம்

கணவன்-மனைவி தகராறு

பள்ளிபாளையம் அடுத்த ஆயக்காட்டூர் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 25). இவர் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா (23). ஈரோட்டில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்தார். முருகனும், துர்காவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு துர்கா, கணவர் முருகனிடம் டி.வி.க்கு ஸ்டாண்ட் வாங்கி கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு முருகன் மறுப்பு தெரிவித்து உள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் துர்கா மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு முருகன் நூல் மில்லுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் துர்கா தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தார். இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் துர்காவின் தாயார் பரிமளாவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர், தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து பரிமளா பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் துர்கா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டி.வி. ஸ்டாண்ட் வாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தான் துர்கா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துர்காவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் தான் ஆவதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்