சேலம் அருகே பெண் கொலை: 2-வது கணவர் கோபி கோர்ட்டில் சரண்

சேலம் அருகே பெண் கொலை: 2-வது கணவர் கோபி கோர்ட்டில் சரண் அடைந்தாா்

Update: 2023-06-23 21:31 GMT

சேலம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது 2-வது கணவர் கோபி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

2-வது கணவர்

சேலம் வீரபாண்டி அருகே உள்ள சின்னசீரகாபாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 47). இவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மேட்டூரை சேர்ந்த ரகு என்பவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று காளியம்மாள் வீட்டில் தலை மற்றும் உடல் பகுதியில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது காளியம்மாளின் 2-வது கணவர் ரகு சம்பவத்தன்று நண்பர்கள் சிலருடன் காளியம்மாள் வீட்டிற்கு வந்து சென்றதாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து ரகுவை போலீசார் தேடி வந்தனர்.

கோர்ட்டில் சரண்

காளியம்மாளை ரகுவும் அவரது நண்பர்களும் கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக வேறு ஏதேனும் மர்ம நபர்கள் காளியம்மாளை கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். மேலும் கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ரகு நேற்று ஈரோடு மாவட்டம் கோபி 2-ம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்து மாஜிஸ்திரேட்டு தமிழரசு முன்பு சரண் அடைந்தார். பின்னர் அவரை 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் ரகு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்