ரூ.2 லட்சத்தை இழந்த பெண் என்ஜினீயர்

இன்ஸ்டாகிராமில் கல்லூரி தோழி என நம்பி அவர் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்து ரூ.2 லட்சத்தை பெண் என்ஜினீயர் இழந்தார்.;

Update: 2023-02-23 18:45 GMT

ராமநாதபுரம், 

இன்ஸ்டாகிராமில் கல்லூரி தோழி என நம்பி அவர் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்து ரூ.2 லட்சத்தை பெண் என்ஜினீயர் இழந்தார்.

என்ஜினீயர்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி என்பவரின் மகள் விஷ்ணுபிரியா (வயது 25). பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் இருந்து பணியாற்றி வந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவரின் கல்லூரி சீனியர் தோழியின் பக்கத்தினை பார்த்தபோது அவர் பெயரில் ஒரு தகவல் இருந்துள்ளது. அந்த தகவலை உள்சென்று பார்த்தபோது அவர் கிரிப்டோகரன்சியில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை லாபம் பெற்றுள்ளதாக விவரம் தெரிவித்துள்ளார்.

கல்லூரி தோழி என நினைத்து

அதனை பார்த்த விஷ்ணுபிரியா இதுகுறித்து அவரிடம் குறுந்தகவலில் விவரம் கேட்டபோது அவர் உண்மை என்று கூறி இதர விவரங்களை தெரிவித்துள்ளார். இதனால் அதேபோல தானும் முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என்ற ஆவலில் தோழியிடம் அதற்கான வழி கேட்டுள்ளார். அப்போது அவர் குறுந்தகவலில் பிட்காய்னில் முதலீடு செய்தால் இதனை விட தினமும் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கலாம் அதில் தானும் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். கல்லூரி சீனியர் தோழியே சொன்னதால் அதனை உண்மை என நம்பிய விஷ்ணுபிரியா வீட்டில் இருந்தே மற்றொரு வருவாய்க்கு வழிகிடைத்துவிட்டது என்று முதலீடு செய்ய முடிவு செய்தார்.

ரூ.2 லட்சத்தை இழந்தார்

இதன்படி அவர் தனது வங்கி கணக்கில் இருந்து தோழி தெரிவித்தபடி ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். தினமும் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று காத்திருந்த விஷ்ணுபிரியாவிற்கு எந்த பணமும் வராததால் காரணம் புரியாமல் திகைத்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட முதலீடு கணக்கு பகுதியில் கேட்டபோது பதில் கிடைக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விஷ்ணுபிரியா மீண்டும் தனது தோழியை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரை பிளாக் செய்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணுபிரியா அதுகுறித்து விசாரித்தபோது அவரது கல்லூரி தோழியின் இன்ஸ்டாகிராம் கணக்கினை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் அதன்மூலம் இதுபோன்ற மோசடி நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஷ்ணுபிரியா இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்