செல்பி எடுத்தபோது தவறி விழுந்த பெண் என்ஜினீயர் பலி

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பெண் என்ஜினீயர் செல்பி எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்து பலியானார்.

Update: 2022-07-17 20:49 GMT

ஊட்டி,

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் வினிதா சவுத்ரி (வயது 26). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் வினிதா சவுத்ரி தன்னுடன் பணிபுரியும் 9 பேருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, கல்லட்டியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர்.

செல்பி எடுத்தபோது விபரீதம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லட்டி மலைப்பாதை 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் வினிதா சவுத்ரி மற்றும் 9 பேர் அமர்ந்திருந்தனர். அப்போது ஆற்றோரத்தில் நின்று வினிதா சவுத்ரி செல்பி எடுத்தார். அப்போது அவர் ஆற்றில் தவறி விழுந்தார்.

காட்டாற்று வெள்ளத்தில் வினிதா சவுத்ரி அடித்து செல்லப்பட்டார். உடனே அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பிணமாக மீட்பு

அவர்கள் ஆற்றில் வினிதா சவுத்ரி விழுந்த இடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இரவு நேரமானதாலும், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் அதிகமாக சென்றதாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணியில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 2 குழுவாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு குழுவினர் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் இருந்தும், மற்றொரு குழுவினர் பைசன்ஸ்வேலி பகுதியில் இருந்தும் ஆறு, கரையோரத்தில் தேடினர். காலை 9.30 மணியளவில் ஒரு மரத்தில் வினிதா சவுத்ரி பிணமாக கிடந்ததை பார்த்தனர். பின்னர் உடலை குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

விடுதிக்கு 'சீல்'

இறந்த வினிதா சவுத்ரி மற்றும் 9 பேர் தங்கி இருந்த விடுதி அனுமதியின்றி செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

விடுதி பின்புறம் உள்ள ஆற்றுக்கு சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதைதொடர்ந்து அதிகாரிகள் அனுமதியின்றி செயல்பட்ட தங்கும் விடுதிக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்