நொளம்பூரில் நகைக்கடை மோசடி வழக்கில் பெண் ஊழியர் கைது
நொளம்பூரில் நகைக்கடை மோசடி வழக்கில் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.;
சென்னை நொளம்பூரில் உள்ள ஒரு நகை கடையில் வட்டியில்லா நகைக்கடன், முதலீடு தொகைக்கு அதிகவட்டி என விளம்பரம் செய்தனர். இதை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் கோடி கணக்கில் முதலீடு செய்தனர்.
ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு முறையான வட்டி, அசல் கொடுக்காமல் மோசடி செய்தனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நொளம்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் நகை கடையின் உரிமையாளர்களான ஆல்வின், ஆரோன் மற்றும் ஊழியர்கள் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் இங்கு வேலை செய்த பிரியா என்ற பெண் ஊழியரை நொளம்பூர் போலீசார் கைது செய்தனர். பிரியா தனது சொந்த பணம் ரூ.4 லட்சத்தை முதலீடு செய்ததுடன், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.60 லட்சம் வரை வசூலித்து முதலீடு செய்ய வைத்து அதன் மூலம் லாபம் அடைந்து சொத்துக்கள் வாங்கி குவித்ததும் தெரிய வந்தது.
இதுபற்றி அயனாவரத்தைச் சேர்ந்த பார்கவி (31) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் நொளம்பூர் குற்றப்பிரிவு போலீசார், கடை உரிமையாளர்களுடன் இணைந்து பொதுமக்கள் பணத்தை மோசடி செய்ததாக பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.