கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் கைதான பெண் ஊழியர் விடுதலை

புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் கைதான பெண் ஊழியர் விடுதலையானார். புலன் விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி பரிந்துரைத்தார்.

Update: 2022-05-30 17:57 GMT

புதுக்கோட்டை:

படுகொலை சம்பவம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை பிரிவு) பணியாற்றி வந்தவர் பூபதி கண்ணன் (வயது 48). இவர் திருச்சியில் வசித்து வந்தார். பூபதி கண்ணன் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக திருச்சி நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த சவுந்தரி (38) பணியாற்றினார். பூபதி கண்ணன் தினமும் பணிக்கு காரில் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி மாத்தூர் அருகே கும்பக்குடி பிரிவு ரோட்டில் சாலையோரம் பூபதி கண்ணன் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே கார் கதவுகள் திறந்தப்படி இருந்தது. அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசாருக்கு கண்டனம்

இந்த கொலை தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புலன்விசாரணை அதிகாரியாக அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ஜெயராமன் வழக்கை விசாரித்தார். இதில் சவுந்தரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பூபதி கண்ணன் படுகொலை செய்யப்பட்டதாகவும், சவுந்தரி தான் அந்த கொலையை செய்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

வாக்குமூலத்திலும் இதனை கைதானவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் வழக்கில் குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சவுந்தரியை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சரியாக புலன் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என போலீசார் மீது தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதோடு இந்த வழக்கில் புலன் விசாரணை செய்த அதிகாரி மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி பரிந்துரைத்துள்ளதாக அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல் யோகமலர் தெரிவித்தார்.

மேல்முறையீடு

கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆகி, கைதானவர் விடுதலையானதால் அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் அடுத்த கட்டமாக மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தீர்ப்பை முழுமையாக படித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வக்கீல் யோகமலர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் அப்போது புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயராமன், தற்போது பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையான பூபதி கண்ணனின் மனைவி அனுராதா திருச்சி ஆவின் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்