மார்த்தாண்டம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த தச்சு தொழிலாளி சாவு
மார்த்தாண்டம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் சொக்காரவிளையை சேர்ந்தவர் குமரேசன் (வயது 53), தச்சு தொழிலாளி. இவருக்கு கிரிஜா (50) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். குமரேசன் நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மார்த்தாண்டம் பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு இருந்து கருங்கல் செல்லும் பஸ்சில் ஏறினார். அந்த பஸ் நட்டாலம் பகுதியில் வரும்போது, குமரேசன் பஸ்சில் இருந்து இறங்குவதற்காக படிக்கட்டு அருகில் சென்றார். அப்போது அவர் திடீரென நிலை தடுமாறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் குமரேசன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---