உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி கூறினார்.

Update: 2022-06-03 17:29 GMT

திருவண்ணாமலை

பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை பொது மக்களிடம் தெரியப்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து உரையாட பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. போரினால் உக்ரைனில் படித்து வந்த மருத்துவ மாணவர்கள் தற்போது தங்களது படிப்பினை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு அவர்கள் மருத்துவப்படிப்பினை தொடர சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.

மத்திய அரசின் பல திட்டங்கள் மாநிலங்களில் நடைமுறையாகி உள்ளது. அதனை ஆளும் தி.மு.க. அரசு மக்களிடம் தெரிவிக்காமல் மறைத்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் மத்திய அரசு பல விதங்களில் தமிழகத்திற்கு உதவி உள்ளது. ஆனால் அதனை மாநில அரசு தங்களது திட்டங்கள் போல் போலி மாயையை உருவாக்கி உள்ளது.

இதனை முறியடிக்கும் வகையில் தான் தற்போது பா.ஜ.க. கிராமங்களில் உள்ள மக்களுக்கு மத்திய அரசு செய்து வரும் திட்டங்கள் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தினை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் ஜீவானந்தம், ஏழுமலை, பட்டியல் அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்