பழுதடைந்த மின்மாற்றி சீரமைப்பு

தினத்தந்தி செய்தி எதிரொலியை தொடர்ந்து தியாகதுருகம் அருகே பழுதடைந்த மின்மாற்றி சீரமைக்கப்பட்டது.

Update: 2023-08-24 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே குடியநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் கிணற்று பாசனம் மூலம் சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதடைந்ததால், மி்ன்தடை ஏற்பட்டது. இதனால் விவசாய மின்மோட்டார்களை விவசாயிகளால் இயக்க முடியவில்லை. இதன் காரணமாக நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாதநிலை ஏற்பட்டதால் அறுவடைக்கு தயராகி வந்த நெற்பயிர்கள் காய்ந்து கருகி வந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், அவர்கள் பெரும் கவலை அடைந்து வந்தனர்.இதையடுத்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து பழுதடைந்த மின்மாற்றியை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள், பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றால், மின் இணைப்பு வைத்துள்ள விவசாயிகள் ஒவ்வொருவரும் தலா ரூ.2 ஆயிரத்து 500 கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால், மின்மாற்றியில் தனியார் நிறுவனத்தின் மூலம் புதிய காயில் பொருத்தி சீராக மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் செய்தறியாது தவித்து வந்தனர். இது குறித்த செய்தி படத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழில் வந்தது. இதையடுத்து மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்மாற்றியை சரிசெய்து மின்வினியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து விவசாயிகள், உடனே மின்மோட்டார்களை இயக்கி தங்களது நெய்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்