கோபி அருகே மோட்டார்சைக்கிள்-லாரி மோதல்; பெண் சாவு
கோபி அருகே மோட்டார்சைக்கிள்-லாரி மோதல்; பெண் சாவு;
கடத்தூர்
கோபி அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ். அவருடைய மனைவி சின்ன ராசாத்தி (வயது 52). விவசாயம் செய்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் உறவினர் பார்த்திபன் என்பவருடைய மோட்டார்சைக்கிளில் பின்னால் உட்கார்ந்துகொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டு இருந்தார். கோபி மேட்டுவளவு என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பார்த்திபனும், சின்ன ராசாத்தியும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பார்த்திபனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. சின்ன ராசாத்தி படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்ன ராசாத்தி நேற்று காலை இறந்தார்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.