சுதந்திர தின விழாவின்போது உண்ணாவிரதம் இருக்க முயன்றவரால் பரபரப்பு
சுதந்திர தின விழாவின்போது உண்ணாவிரதம் இருக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.;
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்று கொண்டிருந்தபோது, கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் காவி உடை அணிந்த ஒருவர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் விக்கிரவாண்டி அருகே அரசலாபுரம் கிராமத்தை சேர்ந்த ரகுராமன் (வயது 40) என்பது தெரியவந்தது. அப்போது அவர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் நடைபெற்று வரும் தொடர் கொள்ளை, வழிப்பறி, கனிமவள கொள்ளை உள்ளிட்ட பல்வேறு தொல்லைகள் நடைபெறுவதால் இயற்கை வளங்களை காக்க வேண்டி பலமுறை மனுக்கள் கொடுத்ததால் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
என் குடும்பத்திற்கும் எனக்கும் உயிருக்கு பாதுகாப்பில்லை, பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் இன்று (நேற்று) நாடு தழுவிய அகிம்சைவழி உண்ணாவிரத போராட்டம் அனுமதி வேண்டி மனு கொடுத்திருந்தேன்.
அதன்படி உண்ணாவிரதம் இருக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததாகவும், எங்கள் கிராமம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள கனிமவள கொள்ளைகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதை கேட்டறிந்த போலீசார், அவருக்கு உரிய அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.