இந்திய கலாசாரத்தால் ஈர்ப்பு; கும்பகோணம் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜப்பான் நாட்டினர்...!

இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நாட்டினர் கும்பகோணம் கோவிலில் வழிபாடு நடத்தினர். அவர்கள் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்றனர்.

Update: 2022-11-04 04:12 GMT

கும்பகோணம்,

புதுச்சேரியை பூர்விகமாக கொண்டு ஜப்பான் நாட்டில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் ஜப்பான் நாட்டில் தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பரப்பும் நோக்கில் ஆன்மிக வகுப்புகள் நடத்தி வருகிறார்.

இவருடன், ஜப்பானில் குருஜியாக விளங்கும் தக்கா யுக்கா ஜோசி மற்றும் இந்திய கலாசாரம், தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட ஜப்பான் நாட்டை சேர்ந்த 15 பேரை கொண்ட குழுவினர் ஜப்பான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர்.

இவர்கள் கும்பகோணம் அருகே கீழகொற்கை கிராமத்தில் உள்ள புஷ்பவல்லி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடந்த ருத்ர யாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவில், அவிட்ட நட்சத்திர பரிகார தலமாக விளங்குகிறது.

இதுகுறித்து ஜப்பான் நாட்டை சேர்ந்த தக்கா யுக்கா ஜோசி கூறுகையில்,

'பழமையான பாரம்பரியமிக்க இந்திய கலாசாரம் குறிப்பாக தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாடு, தமிழ் மொழி மீது எங்களுக்கு மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் உண்டு. தமிழ் கலாசாரத்தை கற்றுக் கொள்ளவும், ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்ளவும் நாங்கள் இந்தியா வந்தோம்.

புராதன நகரமான கும்பகோணம் நகரில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு நேரில் சென்று அங்குள்ள சாமிகளை தரிசனம் செய்தோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக கலாசாரத்தையும், பண்பாட்டையும், இறை வழிபாட்டையும் ஜப்பான் நாட்டில் பரப்புவதே எங்களது நோக்கம்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்