பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் பழனி தகவல்

பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-17 18:45 GMT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரம்பரிய காய்கறி சாகுபடி

விழுப்புரம் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளின்படி பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி முறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருது வழங்க அரசு வழிவகை செய்துள்ளது. சொந்த, குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இதில் பங்குபெறலாம். அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, முறையான மண் மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர், தோட்டக்கலை துணை இயக்குனர், மாவட்ட கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோர் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வு குழுவினால் 2 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேற்குறிப்பிட்ட 5 காரணிகளில் முழுமையான அளவில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், சான்றிதழும்வழங்கப்படும்.

விருது பெற விண்ணப்பிக்கலாம்

மேலும் இவ்விருது குறித்த விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை பெற www.tnhorticulture.tn.gov.in என்ற தோட்டக்கலை துறையின் இணையதளம், மாவட்ட, வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட, வட்டார, அலுவலகங்களில் வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்