வியாபாரிகள் வராததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம்
வியாபாரிகள் வராததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.;
மயிலாடுதுறை ஒழங்குமுறை விற்பனைக்கூடம் மட்டுமின்றி கூறைநாடு பெரியசாலியத்தெருவில் உள்ள கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தனியார் வியாபாரிகள் பருத்தி கொள்முதல் செய்வது வழக்கம். இன்று ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில் இடமில்லாததால் பருத்தி கொள்முதல் நடைபெறாது என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், கூறைநாடு பெரியசாலியத்தெருவில் உள்ள கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டிக்கு சென்று விவசாயிகள் கேட்டுள்ளனர். அங்கு சனிக்கிழமை வியாபாரிகள் வந்தால் பருத்தி ஏலம் நடக்கும் என்று கூறியுள்ளனர். அதனை நம்பி இன்று (சனிக்கிழமை) 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்து மார்க்கெட்டிங் சொசைட்டி முன்பு காத்திருந்தனர். மாலை 4 மணிவரையில் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அங்கு உள்ள குடோனில் பஞ்சு மூட்டைகளை அடுக்க இடமில்லாததால் விவசாயிகள் சாலையோரங்களில் பஞ்சு மூட்டைகளை அடுக்கிவைத்து இருந்தனர்.