டெட்ராபேக்கில் மது விற்பனை செய்ய விவசாயிகள் சங்கம் ஆதரவு
டெட்ராபேக்கில் மது விற்பனை செய்ய விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.;
சென்னை,
கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பது சுற்றுச்சூழலை கெடுத்து வருகிறது. 'டெட்ராபேக்' என்னும் அட்டை பாட்டில்களில் மது விற்பனை செய்ய பயன்படுத்தலாம் என 4 விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளன.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி, கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சென்னிமலை கி.வே.பொன்னையன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பு ஆகியோர் கூட்டாக அமைச்சர் சு.முத்துசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் அரசின் டாஸ்மார்க் கடைகள் மூலமாக விற்கப்படுகிறது. மதுபானங்கள் அனைத்தும் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த கண்ணாடி பாட்டில்கள் 180 எம்.எல். அளவுள்ள சிறிய பாட்டிகளாகவே உள்ளன. மது அருந்துவோர் இந்த பாட்டில்களை பயன்படுத்திவிட்டு கண்ட கண்ட இடங்களில் போட்டு விடுகின்றனர்.
குறிப்பாக பாசனக்கால்வாய் செல்லும் அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறு இடங்களில் இந்த சிறு பாட்டில்கள் கொட்டி கிடப்பதை காணலாம். அதோடு வேளாண் விளை நிலங்களில் வேலை செய்யும் பலரும் இந்த பாட்டில்களை வயலில் பல்வேறு இடங்களில் அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இந்த பாட்டில்களை சேகரித்து ஒழுங்கு செய்ய இயலுவதில்லை. எனவே வயல் வேலைகளில் டிராக்டர் உழவு செய்யும் போது கண்ணாடி பாட்டில்கள் உடைந்து வேளாண் பணிகள் ஈடுபடுகின்றவர்களை கால்களை வெட்டி விடுகின்ற நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் நெல் அறுவடையில் அறுவடை எந்திரங்கள் இந்த பாட்டில்களையும் நெல்லோடு சேகரித்து விடுகின்றன. அவை நொறுங்கி போய் அரிசியிலும் கூட கண்ணாடி துகள்கள் கலந்திருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கண்ணாடி பாட்டில்களில் மது விற்பனை செய்வதால் பெரும்பாலும் கிராமப் புறத்தில் உள்ள வேளாண் விளை நிலங்களையும், கால்வாய்களையும் கடுமையாக பாதித்து வருகின்றது.
எனவே அரசு இப்போது மதுபானங்களை அட்டை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றது. அட்டை பாட்டில்கள் மக்க கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் அட்டை பாட்டில்களின் மூலமாக மதுபானங்களை அடைத்து விற்பனை செய்தால் தற்போது கண்ணாடி பாட்டில்களினால் ஏற்பட்டு வரும் பெரும் சூழல் கேடு தவிர்க்கப்பட முடியும். எனவே அரசு கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக அட்டை மூலம் செய்யப்பட்ட பாட்டில்களை 'டெட்ராபேக்' பயன்படுத்தலாம் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு அவர்கள் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.