விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளை போலீசார் கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன், கரும்பு விவசாயிகள் சங்க பொது செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை தொடர்பான விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினரும் முடிவு செய்து புறப்பட்டபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், விவசாய சங்க நிர்வாகிகள் இளங்கோவன், மேகநாதன், மல்லியம் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.