விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
காமேஸ்வரத்தில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
கீரனேரி ஏரி
கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் கீரனேரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீரை தேக்கி வைத்து காமேஸ்வரம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் விவசாயம் செய்வது வழக்கம். தற்போது அந்த ஏரி தூர்வாரப்பட்டு அந்த மண் அரசு சாலை பராமரிப்புக்காக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ஆழத்தில் மண் எடுப்பதால் தண்ணீரை தேக்கி வைக்கும் போது உப்பு தண்ணீராக மாறும் சூழ்நிலை உள்ளது. இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஆழமாக மண் எடுக்க வேண்டாம் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலைமறியலில் ஈடுபட முயற்சி
இந்தநிலையில் நேற்று அந்த பகுதி விவசாயிகள் நாகை - வேதாரண்யம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அரசு அதிகாரிகள் 5 பேரும், விவசாயிகள் 7 பேரும் குழுவாக அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட அளவில் மண் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் விவசாயிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.