அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறிக்க முயன்ற விவசாயிகளால் பரபரப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறிக்க முயன்ற விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-28 18:06 GMT

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று காலையில் திருச்சியில் இருந்து அரியலூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 32-வது நாளான நேற்று மனித எலும்புகளை வாயில் கவ்வியபடியும், கையில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் அந்த வழியாக சென்றுள்ளது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விவசாயிகள் மனித எலும்புகளை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டப்படி வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை மறிக்க முயன்றனர்.விவசாயிகளை கண்டதும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்தி விவசாயிகளிடம் பேசி கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்