ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்
பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் குழாயை மீண்டும் பழைய படி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை அருகே ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.;
பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் குழாயை மீண்டும் பழைய படி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை அருகே ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
கல்லணைக்கால்வாய்
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பிரிந்து வரும் கல்லணைக் கால்வாய் (புதாறு) தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் பாசனத்துக்கு பயன்படுகிறது. இந்த ஆற்றில் முன்பெல்லாம் வினாடிக்கு 4,200 கன அடி தண்ணீர் சென்றது. தற்போது 3 ஆயிரம் கனஅடி சென்றாலே கரைகள் உடைத்துக்கொள்ளும் அளவுக்கு உள்ளது.
இதையடுத்து கல்லணைக் கால்வாயை புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் ரூ.2,639 கோடியில் 16 தொகுப்புகளாக புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தபணிகள் அடுத்தாண்டு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் போராட்டம்
தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம் பகுதியிலிருந்து கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் "5 ஏ வாய்க்கால்" மூலம் அப்பகுதியில் 1,800 ஏக்கரில் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பாசனத்துக்காக கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து வாய்க்காலுக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் மூலம் தண்ணீர் வாய்க்கால் வழியாக செல்லும்.
ஏற்கனவே 2 அடி அகலமுள்ள குழாய் பதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், அங்கு ஒரு அடி அகலமுள்ள குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைவான தண்ணீர் வெளியேறி வாய்க்காலுக்கு சென்றால் பாசனத்துக்கு போதுமானதாக இருக்காது என்பதால், பழைய படி 2 அடி அகலமுள்ள குழாயை பதிக்க வேண்டும். அதன் உயரம் உயர்த்தி பதிக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் தாழ்வாக பதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மானோஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம் விவசாயிகள் கல்லணைக்கால்வாய் ஆற்றுக்குள் இறங்கி நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.