கரும்பு நிலுவை தொகையை முழுவதுமாக வழங்க கோரி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கரும்பு நிலுவை தொகையை முழுவதுமாக வழங்க கோரி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.;
ராமநத்தம்,
வேப்பூர் அருகே சித்தூரில் உள்ள சர்க்கரை ஆலை முன்பு நேற்று கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவை தொகையை ஒரே தவணையில் முழுவதுமாக வழங்கிட வேண்டும், விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வாங்கிய கடனை முழுவதும் ஆலை நிர்வாகமே செலுத்த நடவடிக்கை எடுப்பது, ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்திட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஏ. சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக ஆலையை வந்தடைந்தனர்.
இதற்கு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் தனவேல் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், நாகராஜன், அண்ணாதுரை, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கம் சார்பில் கோகுல கிறிஸ்டியன், தமிழக உழவர் முன்னணி சார்பில் முருகன் குடி முருகன், நல்லூர் பெரியசாமி, கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த காசிநாதன், திருமுருகேசன், பெண்ணாடம் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே மாலையில் வேப்பூர் தாசில்தார் மோகன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விவசாயிகளின் கோரிக்கை குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.