சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்

சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்

Update: 2022-10-10 18:45 GMT

மன்னார்குடி அருகே கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறுவை நெல் அறுவடை பணிகள்

டெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை எடுத்து செல்கின்றனர். மன்னார்குடி அருகே கானூர் பருத்திக்கோட்டை, தென்கரைவயல், 19 செருமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கானூர் பருத்திக்கோட்டை கிராமத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக இங்குள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலைமறியல்

இதனை கண்டித்து நேற்று மன்னார்குடி அருகே மன்னார்குடி, கும்பகோணம் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்த விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரை மணி நேரத்திற்கும் மேலாக மன்னார்குடி- கும்பகோணம் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்