நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெற வேண்டும்
நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெற வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ பேசினார்.;
தொழில் நுட்ப வார விழா
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் நுட்ப வார விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் சாருஸ்ரீ கலந்துகொண்டு கருத்துக்காட்சியை திறந்து வைத்து, குறுவை சாகுபடி கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகிறீர்கள். ஆனாலும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் அதிக லாபம் பெற வேண்டும். தற்போது குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி விட்டது. விவசாயிகள் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மாற்றங்களை கொண்டு வர வேண்டும்
முன்னோடி விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சொல்கிற தொழில்நுட்பங்களை மற்ற விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு விவசாயத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வேளாண்மை இணை இயக்குனர் லெட்சுமிகாந்தன், விதைசான்று அலுவலர் ஜெகதீஷ், வேளாண் விஞ்ஞானிகள் செல்வமுருகன், கருணாகரன், அருள்செல்வி, திட்ட உதவியாளர் ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு நுண்ணூட்டம்
விவசாயிகளுக்கு நுண்ணூட்டம், மழைநீர் குழாய் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. சாகுபடி பயிர்களையும், வேளாண் கருவிகளையும், பரண்மேல் ஆடுவளர்த்தல், நடமாடும் மண் பரிசோதனை நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
முன்னதாக வேளாண்மை விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.