குதிரைவாலி பயிருக்கு பதில் புற்கள் முளைத்ததால் விவசாயிகள் அதிர்ச்சி

பேரையூர் பகுதியில் குதிரைவாலி பயிருக்கு பதில் புற்கள் முளைத்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வேளாண் அதிகாரி ்நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2023-09-28 19:38 GMT

பேரையூர், 

பேரையூர் பகுதியில் குதிரைவாலி பயிருக்கு பதில் புற்கள் முளைத்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வேளாண் அதிகாரி ்நேரில் சென்று ஆய்வு செய்தார்.

புற்கள் முளைத்ததால் அதிர்ச்சி

பேரையூர் பகுதி விவசாயிகள் மற்றும் பெருங்காமநல்லூர் பகுதி விவசாயிகள் சேடப்பட்டி மற்றும் பேரையூர் வேளாண்மை அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குதிரைவாலி விதைகளை வாங்கி உள்ளனர். அவற்றை அப்போது பெய்த மழையில் விதைத்தனர். விதைத்த 28 நாட்களில் செடிகள் நன்கு ஓங்கி வளர்ந்தது.

ஆனால் செடிகளை பார்த்த போது அவை குதிரைவாலி செடிகள் இல்லை என்று அதிர்ச்சி அடைந்தனர். குதிரைவாலி பயிர்களுக்கு பதில் கால்நடைகளுக்கு போடும் புற்கள் என தெரியவந்தது. போலியான குதிரைவாலி விதைகளை வேளாண்மை துறை அலுவலகத்தில் வாங்கி விதைத்தது தெரிய வந்தது.

வேளாண் அதிகாரி ஆய்வு

இதுகுறித்து பேரையூரை சேர்ந்த ஜாபர் அலி, காஜா நஜிமுதீன், பெருங்காமநல்லூரை சேர்ந்த காசிமாயன் ஆகிய விவசாயிகள் மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுப்புராஜிடம் புகார் செய்தனர். அவரும் சம்பந்தப்பட்ட பெருங்காமநல்லூர் மற்றும் பேரையூர் பகுதிகளில் மானாவாரி நிலத்தில் குதிரைவாலி சாகுபடி செய்யப்பட்டநிலத்தில் புற்கள் முளைத்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து இணை இயக்குனர் சுப்புராஜ் கூறும் போது:-

பாதிக்கப்பட்ட குதிரைவாலி நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். குதிரைவாலி விதைகளை ஆய்வுக்கு அனுப்பி அதன் முடிவு வந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

வேளாண்மை துறை அலுவலகத்தில் குதிரைவாலி விதைகளை வாங்கி விதைத்தோம்.அவை நன்கு வளர்ந்த உடன் அவை குதிரைவாலி செடிகள் இல்லை.அதற்கு பதில் புற்கள் மட்டுமே முளைத்திருந்தது. இது குறித்து முறையாக வேளாண்மை அலுவலர்களிடம் புகார் செய்தோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்