ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குறைந்த விலை நிர்ணயம்:திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குறைந்த விலை நிர்ணயம் செய்ததை கண்டித்து திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனா்.

Update: 2023-03-02 18:45 GMT


திண்டிவனம், 

திண்டிவனத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நேற்று வழக்கம் போல், ஏராளமான விவசாயிகள் தானியங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து தானியங்களை எடை போட்டு, வியாபாரிகள் வாங்கினர். அப்போது, உளுந்து, காராமணி உள்ளிட்ட பயிர்களுக்கு குறைந்த விலையை நிர்ணயம் செய்ததாக கூறப்படுகிறது.விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால், ஆத்திரமடைந்த அவர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு, திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் திண்டிவனம் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவரிடம் ஒழுங்முறை விற்பனைக்கூடத்தில் விலை பட்டியலை தினசரி ஒட்ட வேண்டும், விவசாயிகள் எடுத்து வரும் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்திட வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்