ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எடைபோடுவதில் முறைகேடு:திருவெண்ணெய்நல்லூரில் விவசாயிகள் சாலை மறியல்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எடைபோடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி திருவெண்ணெய்நல்லூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவெண்ணெய்நல்லூர், ஜன.22-
திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இட நெருக்கடியுடன் இயங்கி வருகிறது. தானியங்கள் வரத்து அதிகரித்தால், பேரூராட்சி வளாகம், தெரு பகுதியில் மூட்டைகள் வைக்கப்பட்டு, எடைபோடப்படும்.
அதேபோன்று, ஏராளமான விவசாயிகள் நெல் மூட்டைகளை எடுத்து வந்திருந்தனர். வரத்து அதிகரிப்பு காரணமாக, இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, தெருக்களில் வைத்து நெல் மூட்டைகள் எடைபோடப்பட்டது. இதில், வியாபாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து, விவசாயிகள் அந்த பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் விஜி மற்றும் அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள், ஒரு மூட்டை நெல் 75 கிலோ என்று கணக்கிடப்படும். ஆனால், எங்களிடம் ஒரு மூட்டை நெல் பெற்றுக்கொண்டு அதில் கூடுதலாக 5 முதல் 7 கிலோ வரைக்கும் நெல்லை சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், எங்களுக்கு 75 கிலோ தான் இருப்பதாக கணக்கிட்டு சொல்கிறார்கள். இவ்வாறு மறைமுகமாக எங்களிடம் இருந்து கூடுதல் நெல்லை பெற்று முறைகேட்டில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். அப்போது, போலீசார் தரப்பில் சரியான முறையில் எடைபோடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும், முறைகேட்டில் ஈடுபடும் வகையில் எடைபோடுவதற்கு பயன்படுத்திய எடை மிஷினை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். இதையடுத்து, விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.