செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் சாலை மறியல்போக்குவரத்து பாதிப்பு

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-12-30 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ- நாம் முறையில் தானியங்களை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் ஒத்துழைக்காததால், நெல் கொள்முதல் செய்வது பழைய நடைமுறைப்படியே நடந்து வந்தது. நேற்று முன்தினம் முதல் இ-நாம் முறையில் தான் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டதால் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தவிர்த்தனர். இதனால் நேற்று முன்தினம் 103 விவசாயிகள் கொண்டு வந்த 2,500 நெல் மூட்டைகள் மற்றும் நேற்று 30 விவசாயிகள் கொண்டு வந்த 500 நெல் மூட்டைகள் தேங்கின.

நெல் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிகள் எப்படியும் பழைய முறையில் கொள்முதல் செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் நேற்று மதியம் வரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் காத்திருந்தனர். இருப்பினும் வியாபாரிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி திடீரென செஞ்சி- திண்டிவனம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பழைய நடைமுறைப்படியே கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டதுடன், தாங்கள் கொண்டு வந்த 3 ஆயிரம் நெல் மூட்டைகளை வியாபாரிகளிடம் விற்பனை செய்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்